வாரன் பஃபெட் - உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
1. உங்கள் முதலீட்டின் மதிப்பு ஐம்பது சதவீதத்திற்கும் கீழ் சரிகையில் கூட பீதியடையாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது என்றால் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இறங்கவே லாயக்கில்லை.
2. எதிலும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை வாழ்க்கைக்கு நல்லது. ஆனால் பங்குவர்த்தகத்தில் அது உங்கள் எதிரி.
3. பங்கு வர்த்தகத்தில் சில கவர்ச்சிகரமான வாய்ப்புகள் வருகையில் அவற்றை ஒதுக்கும் மனவலிமையே ஒரு முதலீட்டாளருக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியது.
4. பெரும்பாலான முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக வாங்கி, விற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாததாலேயே நட்டத்தை அடைகிறார்கள். பெரும்பான்மையான லாபம், பங்குச்சந்தையில் செயல்படாதபொழுதுதான் கிடைக்கிறது. (அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, குறிப்பிட்ட காலம் வரை இருக்கட்டும் என்று முதலீடு செய்கிறீர்கள். நடுவில், சில காரணங்களுக்காக அவற்றை விற்பது, அதன் விலை மாறுபாட்டில் பயந்துகொண்டு விற்றுவிட்டு வேறொன்றில் முதலீடு செய்வது இவை, சரியான முறையில் கணக்கிடாவிடில் நட்டத்தைத் தூண்டிவிடும். பொறுத்தார் பூமியாள்வார் என்ற தமிழ்ப்பழமொழியையே வாரன் பஃபெட் தனது பாணியில் சொல்கிறார்.
5. கொஞ்சம் அசட்டை, மந்தமாக இருத்தல் இவை கூட முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைக்குணங்கள் என்பது இவர் கருத்து. ஏனெனில், முதலீட்டாளர்கள் ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்’ காத்திருக்கும் கொக்குப்போல் இருக்க வேண்டியவர்கள். மிகவும் பரபரப்பாகச் செயல்படுவது, எதிர்பாராத நட்டங்களை உண்டாக்கலாம்.
6. கன்னாபின்னாவென்ற ஊசலாட்டங்கள், அதில் முதலீடு செய்பவர்களின் தாக்கத்தாலேயே உண்டாகின்றன, அந்தந்த நிறுவனங்களின் லாபநட்டங்களால் அல்ல. எனவே அவற்றைக் கண்டு குழம்பவேண்டுவதில்லை.
7. ஒரு முதலீட்டாளர் எல்லா முடிவுகளையும் சரியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. பெரும் தவறான முடிவுகளைச் செய்யாமல் இருந்தால் போதுமானது.
8. ஒரு முதலீட்டைச் செய்கையில், அந்த வாணிபத்தையே விலைக்கு வாங்குவது போல் நினைத்து முதலீடு செய்யுங்கள். பங்குகளை குத்தகைக்கு எடுப்பதுபோல் நினைக்காதீர்கள். (முழு ஈடுபாட்டுடன் அந்த நிறுவனத்தைக் குறித்து அறிந்துகொள்ளுங்கள்)
9. ஒரு முதலீட்டாளராக வெற்றி பெற அதி புத்திசாலியாக இருக்க தேவை இல்லை. அடிப்படை கூட்டல், கழித்தல், பெருக்கல் தெரிந்தாலே போதும்.