ஆசியா கண்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தது நமது பங்குச் சந்தைதான். 1850-களில் மும்பையில் தற்போதைய ஹார்னிமன் சர்க்கிள் (Horniman Circle)இருக்கும் இடத்தில் இருந்த டவுன் ஹால் முன்பு இயற்கையின் வடிவாகிய ஆல மரத்தின் அடியில் ஆரம்பமானதுதான் நமது பங்குச் சந்தை. அந்த மர நிழலில் கூடி தங்களது டிரேடிங்கை தொடங்கினார்கள் நமது புரோக்கர்கள். சில ஆண்டுகள் கழித்து இன்றைய மும்பை மகாத்மா காந்தி ரோட்டில் இருந்த ஆல மரத்தின் அடியில் தங்களது டிரேடிங் தளத்தை மாற்றினர். புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஒவ்வோர் இடமாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
1874-ம் ஆண்டில் நிரந்தரமான ஓர் இடத்தை அடைந்தனர். அதுதான் இன்றைய 'தலால் ஸ்ட்ரீட்' (புரோக்கர் வீதி). 'தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பாம்பே' என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சந்தை, 2002-ல் 'பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' ( BSE பி.எஸ்.இ.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2005-ல் கம்பெனியாக மாற்றப்பட்டது. 1994-ல் தேசிய பங்குச் சந்தை ( NSE என்.எஸ்.இ.) வந்தது. இதையடுத்து இன்று இரு பெரும் பங்குச் சந்தைகள் இருக்கின்றன.
பெரிய நிறுவனங்களின் பங்குகள் இந்த இரண்டு பெரிய சந்தைகளிலும் வர்த்தகமாகின்றன. சில நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் பி.எஸ்.இ-யில் மட்டுமே லிஸ்ட் செய்யப்படுகிறது. அதிக நிறுவனங்கள் லிஸ்ட் ஆன எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை பி.எஸ்.இ-க்கும், தினசரி வர்த்தகம் அதிகமாக நடக்கும் எக்ஸ்சேஞ்ச் என்கிற பெருமை என்.எஸ்.இ-க்கும் உண்டு.
பங்குச் சந்தையில், நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அதுதவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை:
- கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார்)
- மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
- இ.டி.எஃப்-கள் (தங்கம் உட்பட)
- எஃப் அண்ட் ஓ
- கரன்ஸி
No comments:
Post a Comment